நவக்கிரக தலங்களில் குருவுக்குரியது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இங்கு குரு பகவான் சிவனை வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, ஞானம் தருபவராக வீற்றிருக்கிறார். சுந்தரர் இங்கு வந்த போது, சிவபெருமான் வெட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படச் செய்தார். ஆற்றின் மறுகரையில் நின்ற சுந்தரரிடம் வந்த ஓடக்காரர் ஒருவர், அவரை கோவிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி அழைத்து வந்தார். ஆற்றின் நடுவழியில் ஓடம் கவிழும் நிலை ஏற்பட்டது. கலங்கிய சுந்தரர் சிவனை வேண்ட, அவருக்கு காட்சி தந்த சிவபெருமான், தானே ஓடக்காரராக வந்திருப்பதை உணர்த்தினார். ஞான குருவாக இருந்து உபதேசம் செய்தார். இதனால் இவருக்கு ஞான தட்சிணாமூர்த்தி’ என்று பெயர் வந்தது. குரு பெயர்ச்சி விழா இங்கு சிறப்பாக நடக்கும்.