பதிவு செய்த நாள்
26
ஜூலை
2016
05:07
கோவை: பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் பொறுப்பேற்று, ஐம்பது ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பொன்விழா ஆண்டை முன்னிட்டு, தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கவேண்டும் என பிரச்சார இயக்க பயணம் கோவை பேரூர் தமிழ் கல்லுாரியில் துவங்கியது.
தமிழகத்தில், மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ் மொழியே பயிற்று மொழியாக அமையவேண்டும் என்பதை வலியுறுத்தி, 64 நாயன்மார்களின் சிலைகளுடன் பிரச்சார வாகனம் கோவை பேரூர் தமிழ் கல்லுாரியிலிருந்து சென்னை கிளம்பியது. பிரச்சார இயக்கத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமைவகித்து துவக்கிவைத்தார். பிரச்சார வாகனம், கோவை- சென்னை வழிதடங்களில் அமைந்துள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று, தமிழ் பயிற்று மொழி கல்வி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். ஆங்கில வழி திணிப்பை கைவிடவேண்டும், அரசு வேலைகளில் தாய் வழி கல்விக்கு முன்னுரிமை, அரசு பள்ளிகள் மூடும் போக்கை கைவிடுதல், நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இடம்பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படவுள்ளது. இவ்வாகனம் சென்னையில் முதல்வர் அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.