பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உற்சவ மூர்த்தி மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 7 மணிக்கு, அம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், மற்றும் பராசக்தி அம்மன் மாட வீதியில் பவனி வந்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும். விழாவின் நிறைவாக வரும், 5ம் தேதி காலை கோவில் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் பராசக்தி அம்மன் தீர்த்தவாரியும், அன்று மாலை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும் நடக்கும். அன்று இரவு காமதேனு வாகனத்தில் வீதியுலா, நள்ளிரவு, 12 மணி அளவில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் தீ மிதி விழா நடக்கும்.