பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
01:07
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா நடந்தது. ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், உச்சிப்புளி, சத்திரக்குடி, சாத்தான்குளம், தேவிபட்டினம், புத்தேந்தல், திருப்புல்லாணி, தங்கச்சிமடம், உத்தரகோசமங்கை உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா ஜூலை 19ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் தினமும் இரவு நடந்தது. நேற்று முன் தினம் மாலை அம்மன் கரகம் நீர்நிலைகளில் இருந்து எடுத்து கோயில் வந்தடைந்தது. நேற்று காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. பொங்கல், மாவிளக்கு , ஆடு பலி, முடி காணிக்கை, அங்கபிரதட்சணம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் ஊர்வலமாக சென்று குளம், கண்மாய், கடற்கரையில் கரைத்தனர். இக்கோயில்களில் ஆக., 2ல் குளுமை பொங்கல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர்.