பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
01:07
பழநி :பழநி மலைக்கோயில் அருகே ஆவின் பார்லர் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக வெளிமாநிலம் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நுாற்றுக்கணக்கில் வந்துசெல்கின்றனர். அவ்வாறு வருவோர் அமர்ந்து ஓய்வுஎடுத்து செல்ல வசதியாக ஆவின் நிர்வாகம், பழநி- - கொடைக்கானல் பை-பாஸ் ரோட்டில் பால்குளிரூட்டும்மையம் அருகே 30 சென்ட் பரப்பளவில் குளுகுளு வசதியுடன் ஆவின்பார்லர் ரூ.45 லட்சம் செலவில் அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது. ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக பழநியில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஆவின் பார்லர் அமைக்கப்படுகிறது. ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு சாதனங்களுடன் சிறுவர்பூங்காவும், பூந்தோட்டம், செயற்கை நீரூற்று, வண்ண நிழற்குடைகள் உள்ளிட்டவையும் அங்கு இடம்பெறும். அங்கு நெய், பால், தயிர், ஐஸ்கிரீம், பால்கோவா ஆகியவையும் விற்பனை செய்யப்படும். இரண்டு மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.