பதிவு செய்த நாள்
19
செப்
2011
11:09
உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் அக்.6ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. குலசேகரன்பட்டணத்தில்அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கோயில்களில் காண இயலாத அற்புத காட்சியாகும். இங்கு 10 நாள் கொண்டாடும் தசரா திருவிழா மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தப்படியாக புகழ் பெற்றது. இச்சிறப்புமிக்க தசரா திருவிழாவையொட்டி வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு காளி பூஜையும், மாலை 6 மணிக்கு காளிபக்தர்கள் குழு சார்பில் அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும் 27ம் தேதி கொடியேற்றம் : காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலாவும், காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 8 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்றம் முடிந்தவுடன் கோயில் பூசாரி பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். காப்பு கட்டிய பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை பிரிக்க துவங்குவார்கள். காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் நடக்கிறது. பகல் 1 மணி, மாலை 3.30மணி, மாலை 6.30 மணி, இரவு 7.30 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு அம்மன் துர்க்கை திருக்கோலத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. அன்று இரவு சிறப்பு கலை நிழ்ச்சிகள் நடக்கிறது. இரண்டாம் நாள் திருவிழா வரும் 28ம் தேதி முதல் ஒன்பதாம் நாள் வரும் 5ம் தேதி வரை தினசரி காலை 6, 7, 10.30 மணி, பகல் 1 மணி, மாலை 3.30மணி, மாலை 6.30 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், தினசரி இரவு 9 மணிக்கு விசுவகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், மகிஷா சூரமர்த்தினி, ஆனந்தநடராஜர், கஜலெட்சுமி, கலைமகள் என ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. 10ம் திருநாள் வரும் 6ம் தேதி காலை 6 மணி, காலை 8 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 10.30மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. காலை முதலே தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவியத்துவங்குவர். மேலும் 2ம் தேதி முதல் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுவினர் ஊர் ஊராகச் சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்துவர். இரவு 11மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் அருகே எழுந்தருளி மகிஷா சூரம்சம்ஹாரம் நடக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிவார்கள். இரவு 1 மணிக்கு சிறப்பு வாண வேடிக்கை நிகழ்ச்சியும், பதினோராம் நாள் 7ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேø டக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலில் எழுந்தருளி அபிஷேக ஆராதனையும், அதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனிவந்து தேர்நிலையம் அடைதலும், அதிகாலை 5 மணிக்கு கோயில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா புறப்படுதலும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5.30மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தலும், மாலை 6 மணிக்கு காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. பனிரெண்டாம் திருநாள் 8ம் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10மணிக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு முன்னாள் அறங்காவலர் தாண்டவன்காடு கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.