பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
12:07
கோபி: கோபி பச்சமலை முருகன் கோவிலில், சரிந்து விழுந்த மதிற்சுவரின் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. கோபி பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. ஆண்டுக்கு, 42 லட்சம் ரூபாய் வருவாய் பெறும் இக்கோவிலின் வடக்கு பகுதி சுற்றுச்சுவர், சில ஆண்டுகளுக்கு முன் சரிந்து விழுந்ததால், மலையின் மேற்பிரகார கட்டடம் வலுவிழந்தது. இதை சரி செய்ய துறை ரீதியாக, 6.60 லட்சம் ரூபாய் செலவாகும் என, உத்தேச பட்டியல் தயாரித்து, மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கடந்த 2015 நவம்பரில் சூரசம்ஹாரம் நடந்த சமயத்தில், பெய்த மழையால் கோவில் வடக்கு திசையில், மீண்டும் இரண்டாவது முறையாக, வேறு இடத்தில் மதிற்சுவர் இடிந்து விழுந்தது. கோவில் நிதியில் இருந்து, நான்கு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, கடந்த ஏப்., 11ல் பூமி பூஜை நடந்தது. அந்த சமயத்தில் சட்டசபை தேர்தல் நடத்தை விதியால், கட்டமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டது. ஜூன் 15ல் ஒப்பந்ததாரர் கட்டமைப்பை துவக்கினார். கட்டமைப்பின் போது, மதிற்சுவரின் அடிமட்டத்தில் இருந்து, கற்கள் பெயர்ந்து சரிந்து விழுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. தவிர, ஒப்பந்த பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், ஓரிரு நாட்கள் வேலை செய்தும், அதற்கு பின் கிடப்பில் போட்டும் செல்வதால் இழுபறி நீடிக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் முன், கட்டமைப்பு முடித்தால் மட்டுமே, மலைப்பாதையில் மீண்டும் சரிவு ஏற்படாது. எனவே பணிகளை விரைந்து முடிக்க முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.