பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
12:07
கரூர்: கரூர் மாவட்டம் முழுவதும், நேற்று ஆடி 2வது வெள்ளி என்பதால், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள ஆதி மாரியம்மன், நகரின் நடுவில் உள்ள கரூர் மாரியம்மன் கோவில்களில், நேற்று ஆடி, 2வது வெள்ளியாதலால், அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது. மேலும், ஆத்தூர் சோழியம்மன், வாங்கல் புதுக்காளியம்மன், மதுக்கரை செல்லாண்டியம்மன், மகாதானபுரம் மகாலட்சுமி, மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோவில் போன்ற பல்வேறு அம்மன் கோவில்களில், நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதுகுறித்து, மாவட்ட கோவில்கள் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் கூறியதாவது: கடந்த, 22ம் தேதியும், நேற்றும், வரும் ஆகஸ்ட், 5, 12 ஆகிய நாட்களில் ஆடி வெள்ளி வருகிறது. இந்த, நான்கு நாட்களிலும், அந்தந்த கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்களுக்கு வந்து செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நேற்று காலையில் இருந்து வேம்பு மாரியம்மனுக்கு, 12 லட்சம் ரூபாயில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை. 11.30 மணி வரை ரூபாய் நோட்டுக்கள் அலங்காரம் இருக்கும் என்று கோவில் சிவாச்சாரியார் விஜயன் கூறினார். அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களை வைத்து, சேலம் மாவட்டம் வெண்ணந்தூர் சுப்பிரமணி அலங்காரம் செய்திருந்தார்.