பதிவு செய்த நாள்
03
ஆக
2016
12:08
திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், சிந்தாமணி ஓடந்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்காகவும், அமாவாசைக்காக, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும் திரண்டனர். திருமணமான புதுமணத் தம்பதியர், வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்த திருமண மாலையை கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு, புதிய மஞ்சள் சரடு அணிந்தும் வழிபாடு நடத்தினர். அதேபோல், திருமணமான பெண்கள், காவிரிக்கு வழிபாடு நடத்தி, புதிய மஞ்சள் சரடு அணிந்து கொண்டனர்.
தர்ப்பணம் : இது தவிர, ஆடி அமாவாசைக்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக, அம்மா மண்டபம் படித்துறை யில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள், படித்துறையில் அமர்ந்து, முறைப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு, காவிரியில் நீராடினர். ஆடிப்பெருக்கு தினத்தில் பெருக்கெடுத்த காவிரிக்கு, திருச்சி ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் சீர் கொடுத்த வைபவம் நேற்று நடந்தது. அதன்படி, காலை, 6:00 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு, வழி நெடுகிலும் உபயங்கள் கண்டருளினார். காலை, 11:30 மணிக்கு அம்மா மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், மாலை, 4:45 மணிக்கு காவிரி தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், பட்டுப்புடவை, மஞ்சள், குங்குமம், சந்தனம் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சீராக கொடுத்தார்.
குரு பெயர்ச்சி வழிபாடு : திருச்சி மாவட்டம், பிச்சாண்டார் கோவில் கிராமத்தில், உத்தமர் கோவில் உள்ளது. ஸப்த குருக்கள் எழுந்தருளியுள்ள இக்கோவில், குரு பரிகார தலமாக விளங்குகிறது. நேற்று காலை, 9:00 மணிக்கு குரு பகவானுக்கும், பிரம்மாவுக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று குரு பகவானை வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடியில் அமைந்து உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இங்கு, குரு பகவான், தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நவகிரக தலங்களில் ஒன்றான இக்கோவில், குரு பரிகார தலமாக விளங்குகிறது. நேற்று காலை, 9:30 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து, கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சியான போது, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று காலை முதல் இரவு வரை, லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, குரு பகவானை வழிபட்டனர். ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான பக்தர்கள் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.