பதிவு செய்த நாள்
03
ஆக
2016
12:08
கொளத்தூர்: கொளத்தூர் அருகே, 82 வயது முதியவர் தொடர்ந்து, 52வது ஆண்டாக, ஆடி 1ம் தேதி துவங்கி, 18 நாட்கள் தினமும் இரவு மகாபாரத நீதி கதையை மக்களுக்கு கூறி வருகிறார். சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே, கோவிந்தபாடி அடுத்த பாரதியார் தோட்டத்தை சேர்ந்தவர் முதியவர் குழந்தைகவுண்டர், 82. மனைவி பொன்னுதாயி. சிறுவயதிலேயே குழந்தை கவுண்டர் வீட்டிலுள்ள பெருமாள் சிலை அருகே அமர்ந்து, மகாபாரத கதையை பாடலாக பாடுவது வழக்கம். மகாபாரதத்தில் குருஷேத்திர போர் ஆடி 1ம் தேதி துவங்கி, 18 நாட்கள் நடந்தது. இறுதிநாளான, ஆடி 18 அன்று போர் முடிந்து பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை காவிரியாற்றில் சுத்தம் செய்து இறைவனை வழிபாடு செய்ததாக தெரிகிறது. அதர்மம் அழிந்து, தர்மம் வென்றதையும், போரில் ஏற்பட்ட வெற்றியை கொண்டாடும் வகையிலும், ஆடி18 பண்டிகையை காவிரி கரையோர மக்கள் கொண்டாடுவதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தை கவுண்டர் கடந்த, 52 ஆண்டுகளாக ஆடி 1ம் தேதி துவங்கி, 18 நாட்கள் தினமும் இரவு, 8 மணிக்கு துவங்கி, அதிகாலை வரை மகாபாரத சொற்பொழிவாற்றுகிறார். சுற்றுப்பகுதி மக்கள் இரவு முழுவதும் கண்விழித்து அமர்ந்து கேட்கின்றனர். சொற்பொழிவு கேட்கும் மக்களுக்கு குழந்தை கவுண்டர் குடும்பத்தினர் தினமும் உணவு சமைத்து வழங்குகின்றனர். ஆடி 18ம் தேதி மகாபாரதத்தின் இறுதி கதையை கூறும் குழந்தை கவுண்டர், குரு?ஷத்திர போர் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில், நேற்று அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று நீராடி மீண்டும் வந்து தர்மன் பட்டம் சூட்டியதை கூறி, சொற்பொழிவை நிறைவு செய்தார்.