பதிவு செய்த நாள்
03
ஆக
2016
12:08
கரூர்: கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி ஆற்றின் கரையோரம், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடந்தது. காவிரியில், இந்தாண்டு போதிய நீர் வராததால், ஓடை போல் சிலு, சிலுவென ஓடும் நீரில் நீராடி மக்கள் குடும்பத்துடன் மகிழ்ந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடு: நெரூர் காவிரியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி வைத்து, அவ்வப்போது போலீசார் எச்சரிக்கை செய்த வண்ணம் இருந்தனர். சுழல் மற்றும் மணல் உள்வாங்கும் பகுதிக்குச் செல்லவிடாமல் சிகப்புக் கொடிகளை நட்டு வைத்தனர். எண்ணெய் குளியல்: வாலிபர்கள் மற்றும் பெண்கள் தலையில் எண்ணைய் தேய்த்துக் கொண்டு வந்து புனித நீராடினர். காவிரிக்கரையில் கூடிய புதுமணத்தம்பதியர் காவிரித்தாயை வழிபட்டு வணங்கினர். அத்துடன் மாங்கல்யத்தை மாற்றிக் கட்டிக் கொண்டனர். அதேபோல், திருமணத்தன்று தாங்கள் சூடிய மாலைகள் மற்றும் மங்களப் பொருட்களை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
மூதாதையருக்கு தர்ப்பணம்: காவிரிக் கரையோரம் பல்வேறு புரோகிதர்கள் அமர்ந்து பொதுமக்களின் முன்னோர்கள் இறந்ததற்கு, அவர்கள் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்தனர்.
சிறப்பு பூஜை: அமராவதி ஆற்றங்கரையில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. லாலாப்பேட்டை மாரியம்மனுக்கு தங்கநகையுடன் கூடிய புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. கடம்பர்கோவில் வட திசையைநோக்கி இருப்பதால் பொது மக்கள் காவேரியில் நீராடி கடம்பனேஸ்வரரை தரிசித்தால் காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை தரிசித்ததுப்போல் பொது மக்கள் வந்து இருந்தனர்.
குருப்பெயர்ச்சி: கரூர் பசுபதீஸ்வரர் கோவில், கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில், ஆர்.டி.மலை விரையாச்சிலை ஈஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
பரிசல் போட்டிகள் ரத்து: வேலாயுதம்பாளையத்தில், ஆடிப்பெருக்கான நேற்று, பரிசல் போட்டி நடப்பது வாடிக்கை. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பரிசலில் வருபவர்கள் தாங்கள் எல்லை வரை வந்து காவிரித்தாயை வணங்கிச் செல்வதும் வழக்கம். ஆனால், இந்தாண்டு காவிரியில் குறைந்தளவே தண்ணீர் ஓடுவதால் பரிசல் போட்டி நடத்தவில்லை.
பிரம்மேந்திராள் கோவில்: கரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலில், தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் அவ்வப்போது வந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.