பதிவு செய்த நாள்
04
ஆக
2016
11:08
சபரிமலை: சபரிமலை நடை இந்த மாதம் இரண்டு முறை திறக்கிறது. நிறைபுத்தரி பூஜைக்காக ஆக., ஏழாம் தேதியும், ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக., 16-ம் தேதியும் திறக்கிறது.
சபரிமலையில் எல்லா தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். எனினும் புதிதாக வயலில் விளையும் நெற்கதிர்களை ஐயப்பனுக்கு சமர்ப்பணம் செய்து நடைபெறும் நிறைபுத்தரிசி பூஜை அந்த குறிப்பிட்ட நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து முடிவு செய்து அறிவிக்கப்படும். இந்த ஆண்டு நிறைபுத்தரிசி பூஜை வரும் எட்டாம் தேதி நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை வரும் ஏழாம் தேதி மாலை ஐந்து மணிக்கு திறக்கப்படும். அன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். எட்டாம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பப்படும் நெற்கதிர்களை மேல்சாந்தி சங்கரன்நம்பூதிரி தலையில் சுமந்த படி கோயிலை வலம் வந்து ஸ்ரீகோயிலுக்குள் கொண்டு செல்வார். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு நெற்கதிர்களை சமர்ப்பணம் செய்து பூஜைகள் நடத்துவார். ஸ்ரீகோயில் நெற்கதிர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எட்டாம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆவணி மாத பூஜை: ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்படும். அன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. 17-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்யதரிசனம், அபிேஷகத்துக்கு பின்னர் நெய்யபிேஷகம் ஆரம்பமாகும். 21-ம் தேதி வரை ஐந்து நாட்களும் காலை முதல் மதியம் வரை நெய்யபிேஷகம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிேஷகம், இரவு ஏழு மணிக்கு படிபூஜை ஆகியவை நடக்கிறது. இந்த நாட்களில் சகஸ்ர கலசாபிேஷகமும், உதயாஸ்மனபூஜையும், அஷ்டாபிேஷகமும் நடக்கிறது. 21-ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாதம் மலையாள ஆண்டு பிறப்பு என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தந்திரி பொறுப்பு: சபரிமலையில் பூஜைகளை கவனிக்கும் பொறுப்பு தாழமண் தந்திரிகளிடம் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஒருவர் இந்த பொறுப்பு வகிப்பார். கடந்த ஆவணி முதல் பூஜைகள் செய்து வந்த தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, வரும் எட்டாம் தேதி நிறைபுத்திரிசி பூஜையுடன் தனது கால அளவை நிறைவு செய்வார். 16-ம் தேதி நடை திறக்கும் போது தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் செய்வார். அடுத்த ஆடி மாதம் வரை இவர் இந்த பொறுப்பில் இருப்பார்.