பதிவு செய்த நாள்
04
ஆக
2016
11:08
சென்னை: எட்டாவது இந்து ஆன்மிக கண்காட்சியின், இரண்டாம் நாளான நேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும், பத்மா சுப்பிரமணியன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அறநெறி, கலாசார பயிற்சிக்கான முனைப்பு நிறுவனமும், இந்து ஆன்மிக சேவை நிறுவனமும் இணைந்து, ஆண்டுதோறும் இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை நடத்தி வருகின்றன. இந்தாண்டு எட்டாவது கண்காட்சி, 2ம் தேதி முதல், வரும், 8ம் தேதி வரை, சென்னை, மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில் நடக்கிறது.
கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று, சுற்றுச்சூழல் பராமரிப்பு என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த கருத்தை வலியுறுத்தி, அது தொடர்பான, 366 விளையாட்டு, இசை, பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சென்னை புறநகரில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த, 4,100 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற, 1,098 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பவன் ராஜாஜி வித்யாஷ்ரமத்தின் நிர்வாகி ராமசாமி, சிறப்புவிருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். நேற்று மாலை, பத்மா சுப்பிரமணியன் தலைமையில், கங்கை யின் கதை, ஆத்திச்சூடி என்ற தலைப்பில், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காயத்திரி கண்ணன், வினித் மற்றும் நிர்த்யோதயா நாட்டிய கலைக்கூடத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் நடனம், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.