வடமதுரை கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2016 11:08
வடமதுரை: வடமதுரை அருகே கோயில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்று வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். வடமதுரை அருகே கொல்லப்பட்டி கிராமம், ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்த 20 பெண்கள் உள்பட பக்தர்கள் நேற்று காலையில் கோயில் முன்பாக அமர்ந்தனர். பூசாரி பழனிச்சாமி தன் பாதத்தில் ஆணிகள் குத்தும்படி வடிவமைக்கப்பட்ட மரக்கட்டை காலணியுடன் பக்தர்களை ஒருமுறை வலம் வந்தார். பின்னர் இரண்டு ஈட்டிகளையும் தனது வயற்றில் மாறி, மாறி குத்தியபடி வழிபாடு நடத்தினார். வரிசையாக பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். அதன் பின்னர், பக்தர்களுக்கு சேர்வைகாரர்களிடம் ஒரு சாட்டையடி பெற்று கொண்டு கோயிலுக்குள் சென்று அம்மன் வழிப்பட்டனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் கோவிந்தா.. கோவிந்தா.. என கோஷமிட்டபடி இருந்தனர். வினோத வழிபாட்டை காண ஏராளமான கிராம மக்கள் திரண்டிருந்தனர். விழா ஏற்பாட்டினை வெள்ளவரிசை முருகேசன், ஊர்கவுண்டர் காளிமுத்து மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
சாணார்பட்டி: சாணார்பட்டி கம்பிளியம்பட்டி அருகே ஆண்டியபட்டியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆக.2 அன்று காப்பு கட்டி பக்தர்கள் விரதம் தொடங்கினர். நேற்று காலை சேர்வை ஆட்டத்துடன் அம்மன் அலங்கரிப்பட்டு கோயில் கொண்டு செல்லப்பட்டது. கோயில் முன்பு உள்ள விளக்குத் துாணில் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து ஆண் மற்றும் பெண் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்ததிக்கடன் செலுத்தினர். இன்றும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏாரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.