பதிவு செய்த நாள்
04
ஆக
2016
11:08
கோபிசெட்டிபாளையம்: மழை பெய்ய வேண்டி, பாசன விவசாயிகள் கிடாய் வெட்டி, கொடிவேரி தடுப்பணைக்கு வெளியே, முழங்கால் அளவு தண்ணீரில் நின்று, நேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீரை, கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனமாக, மொத்தம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் பாசனம் பெறுகின்றன. கடைக்கோடி வரை பாசன வசதி பெற, பொதுப்பணி துறை சார்பில், 40.45 கோடி ரூபாய் மதிப்பில், இரு வாய்க்கால்களிலும் லைனிங் பணி, 2015 மே., 29ல் துவங்கியது. ஜூன், 15க்குள் பணிகள் முடித்து, முதல்போகத்துக்கு தண்ணீர் திறப்பதாக, பொதுப்பணி துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். வழக்கமாக ஏப்ரல், 15ல் திறக்க வேண்டிய முதல்போக தண்ணீர், வாய்க்கால் லைனிங் பணி மற்றும் பருவம் தவறிய மழையால், பொதுப்பணி துறையின் நீர் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், நீண்ட இழுபறிக்கு பின், 106 நாள் கழித்து, 2015 ஜூலை, 31ல் முதல்போகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் போகத்துக்கு, 2015 டிச.,20ல், பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த ஏப்., 29ல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்க கோரியும், பொதுப்பணித்துறையின் நீர் நிர்வாகத்தை கண்டித்தும், தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள், கடந்த ஜூலை, 28ம் தேதி, மொடச்சூர் ரோட்டில் உள்ள பொதுப்பணி துறை அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர, மழை பெய்ய வேண்டி, பாசன விவசாயிகள், நேற்று அணை முனியப்பனுக்கு இரு கிடாய்கள் வெட்டி பூஜை செய்தனர். அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி தலைமையில், 16 பேர் கொடிவேரி தடுப்பணைக்கு வெளியே, முழங்கால் அளவு தண்ணீரில் நின்று மழைபெய்ய வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி கூறுகையில், பவானிசாகர் அணை நிரம்ப, மழை வேண்டி கொடிவேரி அணை முனியப்பனுக்கு கிடாய் வெட்டி, முழங்கால் அளவு தண்ணீரில் நின்று பிரார்த்தனை செய்தோம். வருணபகவான் வழிகாட்டுவார் என விவசாயிகள் நம்புகிறோம்,என்றார்.