பதிவு செய்த நாள்
20
செப்
2011
11:09
தக்கலை : குமாரகோவில் மலர்முழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மலர்முழுக்கு விழா இந்தாண்டு சிறப்பாக நடந்தது. நிர்மால்ய பூஜையுடன் விழா துவங்கியது. காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை வேல்முருகன் சேவா சங்கம் சார்பில் அகண்டநாம ஜெபம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து 10.30 மணி வரை முருகப்பெருமானுக்கு விதவிதமான மலர்களால் அபிஷேகம் நடந்தது. மதுரை, நெல்லை, தோவாளை, இரணியல், திங்கள்நகர், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், அருமனை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட வண்ண வண்ண மணம் கமழும் மலர்களால் சுவாமிக்கு மலர்முழுக்கு விழா நடந்தது. பூக்களால் கிரீடம், வேல், சேவல்கொடி போன்றவை அமைக்கப்பட்டு சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. இதுபோல் கோயில் உள்பிரகாரம் முழுவதும் மலர் மாலைகளால் தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. சுவாமிக்கு தினை மாவினால் ஆன நெய் விளக்கு, அரவணை, உண்ணியப்பம் நிவேத்யம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் "வேல்வேல் முருகா... வெற்றிவேல் முருகா... என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் முருகபெருமான் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வாகனத்தை கோயில் அர்ச்சகர்கள் சுமந்து கோயிலை மூன்று முறை வலம் வந்தனர். பஜனை, நாதஸ்வர கச்சேரி நடந்தது.