பதிவு செய்த நாள்
05
ஆக
2016
12:08
புதுச்சேரி: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் மற்றும் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில், ஆடிப்பூர தேரோட்டம் நேற்று நடந்தது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன துவங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கோகிலாம்பிகை அம்மனை, தேரில் எழுந்தருளச் செய்து, நான்கு மாட வீதிகள் வழியாக, பெண்கள் தேரினை இழுத்து வந்தனர். திருக்காஞ்சி காமாட்சி, மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர விழா கடந்த 26ம் தேதி துவங்கி, நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை, முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து துவக்கி வைத்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, சுகுமாறன் எம்.எல்.ஏ., அறநிலையத் துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தங்கமணி, சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.