பதிவு செய்த நாள்
06
ஆக
2016
02:08
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், 3 டன் பூக்களை கொண்டு பூச்சொரிதல் விழா (5.8.16) வெள்ளிக்கிழமை நடந்தது.
புகழ்மிக்க புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம், மூன்றாவது வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடத்தப்படும். இதன்படி இந்த ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, களஞ்சேரி ரதம், ராவுசாப்பட்டி ரதம், திருக்கானூர்பட்டி ரதம், நாஞ்சிக்கோட்டை ரதம் ஆகியவை, (5.8.16) வெள்ளிக்கிழமை முன்தினம் இரவு தஞ்சை பெரிய கோவில் வந்தடைந்தன. அங்கு நின்ற விநாயகர் சன்னிதி பெரியகோவில் ரதம், மாரியம்மன் கோவில் ரதம் இணைந்தன. இவ்வாறு ஒன்றாக இணைந்த ரதங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து பூக்கள் பெறப்பட்டன.
சிறிது நேரத்திற்கு பின், அங்கிருந்து ரதங்கள் புறப்பட்டு மேல வீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழ வீதி, கீழவாசல், வாடிவாசல், சவுராஷ்டிரா தெரு, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களிடம் இருந்து பூக்களை பெற்றுக் கொண்டு, (5.8.16) வெள்ளிக்கிழமை காலை தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தன. அதே போல் தெத்துவாசல்பட்டி ரதம், தோழகிரிபட்டி ரதம், திருவையாறு ரதம், வல்லம் பிள்ளையார்பட்டி ரதம், வெள்ளை விநாயகர் ரதம், கீழவாசல் ரதம், அருள்மொழிப்பேட்டை ரதம், புலவர்நத்தம் ரதம் ஆங்காங்கே புறப்பட்டு பக்தர்களிடம் இருந்து பூக்களை பெற்று, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை வெள்ளிக்கிழமை மதியம் வந்தடைந்தன.