சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்; மலையில் இருந்து படி இறங்கி வந்த சுவாமி
பதிவு செய்த நாள்
22
அக் 2025 03:10
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து இன்று, காலை வள்ளி தேவசேனா சமேத சண்முகசுவாமி, சந்திரசேகரா், வீரகேசரி ஆகியோா் மலைக் கோயிலில் இருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்தை அடைத்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவில் படிச்சட்டத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. அக். 24 முதல் 26ம் தேதி வரை காலை, மாலையில் படிச்சட்டத்தில் சுவாமி வீதி உலாவும், ஆறாம் நாளான 27ம் தேதி மகா கந்த சஷ்டி நடைபெறுகிறது. இதில், 108 சங்காபிஷேகம், சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்குதல், நவ வீரா்கள் வேடமேற்று சூரசம்ஹாரம் செய்தல், பின்னா் தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தல் ஆகியவை நடைபெறுகின்றன. அக். 28 காலையில் தீா்த்தவாரி, இரவு 8 மணிக்கு தேவசேனா திருக்கல்யாணம், 29, 30 ஆம் தேதிகளில் ஊஞ்சல் திருவிழா, 31 ஆம் தேதி இரவு ஸ்ரீ வள்ளி தேவசேனா சண்முகா் திருக்கல்யாண ஊா்வலம், பல்லக்கு வீதி உலா, நவம்பா் 1 ஆம் தேதி வள்ளி தேவசேனா சண்முகசுவாமி யதாஸ்தானம் சேருதல் ஆகிய வைபவங்கள் நடைபெறவுள்ளன.
|