‘பசித்த சமயத்திலும் தன்னைத் தேடி வரும் உதவிகளை ஒதுக்குகிறவர்களே கண்ணியவான்கள் என்ற பைபிள் வசனத்தை வாசித்தவர்கள், லஞ்சம் வாங்க மாட்டார்கள் என நம்பலாம். ஒரு கிறிஸ்து சபையில் சில போதகர்கள் இருந்தனர். அவர்கள் பசி, பட்டினியுடன் தேவ சேவை செய்து வந்தனர். ஒருமுறை அவ்வூரில் நடந்த திருமணத்தின் போது ஏராளமான உணவு மீந்துவிட்டது. அதை போதகர்களுக்கு கொடுத்து அனுப்பினார் மணமகனின் தந்தையான பணக்காரர். அவர்கள் உணவு கொண்டு வந்தவரிடம், “ஐயா! இந்த உணவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமைக்காக வருந்துகிறோம். இந்த ஊரில் எத்தனையோ ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கு இதைக் கொடுங்கள், என்றனர். ஒரு ராஜாவிடம் வேலை செய்பவன் தன் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. ராஜாவின் அதிகாரி என்ற கவுரவம் வேண்டும். இல்லா விட்டால், அந்த ஊழியன் செய்யும் தவறு, ராஜாவுக்குத் தான் அவப்பெயரை உண்டாக்கும். அதுபோலவே இயேசு என்ற முதலாளியிடம், பணிபுரியும் போதகர்கள் அவரைப் போலவே கஷ்டங்களுக்கு மத்தியிலும் பொதுச் சேவை செய்ய வேண்டுமே தவிர, தங்கள் கஷ்டத்தை பெரிதாக நினைக்கக் கூடாது.