சின்னமனுார்: தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில், சோணை கருப்பசாமிக்கு ஆட்டு கிடா வெட்டி மது விருந்து படையலிடுவதற்காக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராந்தி பாட்டில்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். குச்சனுார் சுரபி நதிக்கரையில் சுயம்பு மூலவராக சனீஸ்வரர் அருள் பாலிக்கிறார். சனி திசை நடப்பவர்கள் இங்குள்ள அனுகிரக மூர்த்தியை தரிசித்தால், கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த கோயில் ஆடி சனிவார திருவிழா, ஜூலை 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காவது சனிவார திருவிழா நிறைவடைந்த பின், சோணை கருப்பசாமிக்கு மது ஊற்றும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மது பாட்டில்கள், சாமியின் வலதுபுறமுள்ள மண் கலயத்தில் ஊற்றப்படும். கருப்பசாமியின் ஆன்மிக பலத்தால் அந்த மது உறிஞ்சப்படும். படையல்: நேற்றிரவு நடந்த மது படையலுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராந்தி பாட்டில்களை காணிக்கையாக பக்தர்கள் வழங்கினர். உபயதாரர்கள் வழங்கிய 30 ஆட்டு கிடா மற்றும் 21 சேவல்களை வெட்டி, அறநிலையத்துறையினர் விருந்து தயாரித்து வழங்கினர்.
அர்ச்சகர் ரகுராம் கூறுகையில், “நினைக்கும் காரியங்கள் நிறைவேறினால் மது பாட்டில் வழங்குவதாக பக்தர்கள் வேண்டிக்கொள்வர். அவர்கள் வழங்கும் பாட்டில்களில் உள்ள மதுவை சுவாமியின் வலது பாதம் அருகில் உள்ள கலயத்தில் ஊற்றுவோம். ஒரு படி(1.5 லி.,) கொள்ளளவு கொண்ட மண் கலயம் எவ்வளவு மது ஊற்றினாலும் நிறையாது. குடிப்பது போன்ற ஒலி எழுந்தவாறு மது உறிஞ்சப்படும். சன்னதிக்குள் மது பாட்டில்களை திறந்து ஊற்றும் போது வாடை வராது. வெளிநாடுகளில் இருந்தும் மது பாட்டில்கள் அனுப்பப்படுகிறது,” என்றார்.