பதிவு செய்த நாள்
11
ஆக
2016
11:08
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தை அக்.12 ல் நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஒரு வாரம் நடைபெறும் விழாவில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட முப்பெரும் கலைவிழா, இறுதி நாளில் தேரோட்டம் நடைபெறும். சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வழிபடுவர் . இந்த ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கான தேதியை முடிவு செய்ய அதிகாரிகள் பக்தர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்தது. கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.
பக்தசபா மூத்த உறுப்பினர் அரிஹர கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். பக்தசபா தலைவர் சுந்தர்ராஜப்பெருமாள் வரவேற்றார். செயலாளர் விவேகானந்தன் தீர்மானங்களை முன்வைத்து பேசினார். செப்.27 ல் வடக்காச்சியம்மன் கோயில் மதுப்பொங்கல் சாட்டுதல், அக்.4 ல் மதுப்பொங்கல் விழா, முத்தாலம்மன் பொங்கல் விழா சாட்டுதல், அக்.5 முதல் கலைவிழா துவக்கம், அக்.11 ல் முத்தாலம்மன் பொங்கல் விழா, அம்மன் தேர் எழுந்தருளல், அக்.12ல் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பக்தசபா நிர்வாகிகள் சேதுசெல்லச்சாமி, மகாலிங்கம், ராமச்சந்திரன், மாரிமுத்து, சோ.மகாலிங்கம் உட்பட பக்தசபா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கார்த்திக் நன்றி கூறினார்.