பதிவு செய்த நாள்
18
ஆக
2016
12:08
திருப்பூர்: ஆவணி மாதப் பிறப்பு மற்றும் விசேஷ நாள் என்பதால், திருப்பூர் நகர கடைவீதிகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது; முக்கிய ரோடுகளில், வாகன நெரிசல் வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது. தமிழ் மாதமான ஆவணி, நேற்று துவங்கியது. முந்தைய ஆடி மாதத்தில், திருமணம், புது மனை புகுவிழா, கட்டட திறப்பு உள்ளிட்ட விசேஷங்கள் குறிப்பிடும்படியாக இல்லை. மாறாக, ஆன்மிகத்தில் சிறப்பான, ஆடி மாதத்தில், பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தன. ஆடி முடிவுற்று, நேற்று ஆவணி மாதம் துவங்கியதால், விசேஷ நிகழ்ச்சிகளும் வரிசையாக அணிவகுக்கவுள்ளன. நேற்று, திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகு விழா, கட்டடங்கள் திறப்பு, புதிய வர்த்தக நிறுவனங்கள் துவக்கம் என ஏராளமான நிகழ்ச்சிகள் அனைத்துப் பகுதியிலும் நடந்தன. இது தவிர, தமிழ் மாதப் பிறப்பையொட்டி, கோவில்களில், சிறப்பு பூஜை நடைபெற்றது. அடுத்து நடக்கவுள்ள விசேஷங்களுக்கு நகை, ஆடை, பொருட்கள் என வாங்கவும், மக்கள்
ஆர்வத்துடன் கடைவீதிகளில் காணப்பட்டனர். இதனால், திருப்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில், நேற்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதியில், ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் ரோடு, தாராபுரம் ரோடு, குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், நிகழ்ச்சிகளுக்கு வந்து சென்ற மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. வழக்கமாகவே, திருப்பூரில் காணப்படும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்கு வரத்து, நேற்று மிகவும் அதிகளவில் காணப்பட்டது. பல முக்கிய ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெருக்கடியால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.