யோக நரசிங்க பெருமாள் கோயில் திருப்பணி முடிவது எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2016 12:08
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் பிரசித்தி பெற்ற யோக நரசிங்க பெருமாள் கோயிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகளை கடந்துள்ளது. திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்துவது எப்போது என பக்தர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் யோக நரசிங்க பெருமாள் கோயில்கள் சோளிங்கர், மதுரை ஒத்தக்கடை மற்றும் உத்தமபாளையத்தில் மட்டுமே உள்ளது. உத்தமபாளையம் கோயில் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், சிதிலமடைய துவங்கியது. எனவே விக்ரகங்கள் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூஜைகள் 2010 ல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து திருப்பணிக்கான பாலாலயம் பூஜை செய்யப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ திருப்பணி துவங்கவில்லை.
2014 ல் உத்தமபாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஓம் நமோ நாராயணா பக்த சபை என்ற அமைப்பை துவக்கினர். அதன் முயற்சியால் தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இருந்த போதும் மடப்பள்ளி கட்டுவதற்கான அனுமதி பெற்றுத் தருவதில் அறநிலையத்துறையினர் இழுத்தடித்து வருகின்றனர். மடப்பள்ளி கட்டாமல் கும்பாபிஷேகம் செய்யக்கூடாது என ஆகம விதிகள் கூறுகிறது. ஆனால் அறநிலையத்துறையினரோ மடப்பள்ளி இப்போதைக்கு கட்ட வேண்டாம் என்று முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது.
பெண் பக்தர்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக யோக நரசிங்க பெருமாள் கோயில் திருப்பணிக்காக பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பெருமாள் தரிசனத்திற்காக சின்னமனுார் மற்றும் கம்பம் செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் தீவிர முயற்சி செய்தும் பயனற்ற நிலை நிலவுகிறது. இக்கோயில் திருப்பணி தடங்கலின்றி நடக்கவும், விரைவில் கும்பாபிஷேகத்திற்கும் அறநிலையத்துறையினர் ஒத்துழைக்க வேண்டும்,என்றனர்.