திருவள்ளூர் மாவட்டம், பொன்மேனி வட்டத்தில், புதுவயல் பெரியபாளையம் வழித்தடத்தில் அமைந்துள்ள ஊர் ஆரணி. சென்னையிலிருந்து வடக்கே சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் உள்ள அருள்மிகு சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் கோயிலில், தெற்கு நோக்கிய வாசல் வழியே நுழைந்தால், அம்பிகை சிவகாமவல்லியின் சன்னிதியை அடையலாம். தண்ணருள் பொங்கும் கண்களில் கருணை பொழிய காட்சி தரும் இந்த அன்னையின் நேர் எதிரே இரு பாதுகைகள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. இவை அன்னை சிவகாமவல்லியின் பாதுகைகள் எனக்கூறப்படுகிறது.