பதிவு செய்த நாள்
13
ஆக
2025
12:08
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் பொன்விழா கொண்டாட உள்ளது.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் எல்லா ஆண்டும் கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் கொண்டாடுவது வழக்கம். இந்த உற்சவத்தை ஒட்டி 15 நாள் நீண்ட செம்பை சங்கீத உற்சவம் நடப்பதும் வழக்கம். இந்த சங்கீத உற்சவத்தின் ஒரு ஆண்டு நடைபெறும் பொன் விழாவின் துவக்க விழா ஆக. 17ம் தேதி பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ள செம்பை கிராமத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து கோழிக்கோடு தளி சிவன் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், திருவனந்தபுரம் ஸ்ரீ வராகம் செம்பை கலையரங்கு, சங்கீத நாடக அகாதமி, திருச்சூர் பிராந்திய தியேட்டர் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து விழா நிறைவு நிகழ்ச்சி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலிலும் நடைபெறுகிறது.
செம்பை சங்கீத உற்சவத்தின் வரலாறு குறித்து செம்பை வித்யா பீடம் செயலாளர் கீழத்தூர் முருகன் கூறியதாவது: 1906ல் தன் பத்தாம் வயதில் அரங்கேற்றம் நடத்தி கர்நாடக இசை உலகிற்கு அடியெடுத்து வைத்தவர் செம்பை வைத்தியநாத பாகவதர். இளமை வயதிலேயே அவர் ஒரு பாடகராகவும், ஒரு கலைஞராகவும் மிகவும் திறமையான இசைக்கலைஞராகவும் வளர்ந்து சர்வதேச அளவில் அவர் புகழ்பெற்றார். முன்னதாகவே தென்னிந்தியாவில் கர்நாடக இசைத் துறையுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட அனைத்து கலைஞர்களும் அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அவர் தனது சமகாலத்தவர்கள், சதீர்த்தியர்கள் மற்றும் சீடர்கள் என அனைவரையும் குருவாயூருக்கு அழைத்து வந்தார். பாடகர்களை ஆதரிக்கும் வாத்திய இசைக்கலைஞர்களேயும் அவர் குருவாயூர் சன்னதிக்கு அழைத்து வந்தார். உற்சவத்தை ஒட்டி மூன்று நாட்களில் நடக்கும் சங்கீத உற்சவம் அன்றே பிரபலம். எவ்வளவு வேலையாக இருந்தாலும், கார்த்திகை மாதம் நவமி-தசமி-ஏகாதசி ஆகிய நாட்களில் செம்பை வைத்தியநாத பாகவதர் மற்றும் அவரது பரிவாரர்களும் குருவாயூரில் தவறாமல் சங்கீதா ஆராதனை நடத்தி வந்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பாகவதர், கிருஷ்ணரை தரிசிக்க, பல்வேறு துறைகளில் தான் சந்தித்த பலரையும் அவர்களது குடும்பத்துடன் அழைத்து வந்தார்.
இசை நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு சிறிய தொகையை குடும்பச் செலவுகளுக்காகச் செலவிட்டு, மீதியை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தவர் செம்பை வைத்தியநாத பாகவதர். அவர் தனது சொந்த செலவில் குருவாயூர் கோவில் 43 முறை "உதயாஸ்தமன பூஜைகளைச் செய்து இன்றுவரை முதலிடத்தில் இருக்கிறார். ஏகாதசி உற்சவம் நடக்க ஆறு வாரம் மட்டுமே உள்ள நிலையில் 1974 அக்டோபர் 16ம் தேதி செம்பை வைத்தியநாத பாகவதர் உயிரிழந்தார். செம்பை வைத்தியநாத பாகவதர் இல்லாத 1974 டிசம்பரில் வழக்கம் போல் நடைபெறவிருந்த ஏகாதசி சங்கீத உற்சவம், பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சாமூதிரிப்பாடு தலைமையிலான தேவஸ்வதான நிர்வாக குழு சிறப்பு கவனம் செலுத்தியிருந்தனர். நிர்வாக குழுவினர், பாகவதரின் சீடரும், இசை கலைஞருமான பூமுள்ளி ராமன் நம்பூதிரிபாட்டைத் தொடர்பு கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். கொங்கார்பிள்ளி பரமேஸ்வரன் நம்பூதிரி, டி.வி.கோபாலகிருஷ்ணன், ஜெய -விஜயன், பாபு நம்பூதிரி, குருவாயூர் பொன்னம்மாள் ஆகியோர் இவ்விஷயத்தில் தலையிட்டு அந்த ஆண்டு சங்கீத உற்சவத்தை வெகு விமர்சையாக நடத்தினர்.
1975ல் செம்பை சங்கீத உற்சவமாக மாறிய பிறகு பாடவருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருந்தன. 1982-ல் 5 நாட்களாக இருந்த சங்கீத உற்சவம் 1983-ல் 10 நாட்கள் ஆனது. சங்கீதாராதனை செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து 1995 முதல் சங்கீத உற்சவம் 15 நாட்களாக மாறியது. 30 ஆண்டுகளாக இதே நிலையில் இந்த சங்கீத உற்சவம் நடந்து வருகிறது. 3000க்கும் மேலான இசைக் கலைஞர்கள் இந்த சங்கீத உற்சவத்தில் கலந்துகொண்டு சங்கீத ஆராதனை நடத்தி வருகின்றனர். நம் நாட்டில் இவ்வளவு பெரிய சங்கீதம் வேறெங்கும் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செம்பை சங்கீத உத்சவம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பிரபல இசைக்கலைஞர்களைக் கொண்ட ஒரு துணைக் குழு கோவில் நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் சிலரும் உள்ளனர். சங்கீத உற்சவத்தின் 14வது நாளான தசமியில் நிகழ்த்தப்படும் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுதல், தியாகராஜ சுவாமியின் நினைவுபடுத்துவதாகும். 2005 முதல் சங்கீத உற்சவத்தை ஒட்டி சிறந்த இசை கலைஞர்களுக்காக செம்பை விருதும் கோவில் நிர்வாகம் வழங்கி வருகின்றன. செம்பை வைத்தியநாத பாகவதர் பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், குருவாயூரில் நடைபெறும் செம்பை சங்கீத உற்சவம் அவரது வாழ்நாளுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகக் கருதப்படுகிறது. செம்பை வைத்தியநாத பாகவதர் இறப்பிற்கு பிறகு 1975 முதல் ஏகாதசி சங்கீத உற்சவத்தை "செம்பை சங்கீத உற்சவம் என பெயர் சூட்டிய பின் கிருஷ்ணர் பக்தியின் மூலம், நடந்து வரும் இந்த சங்கீத ஆராதனை பொன்விழா காண்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.