பதிவு செய்த நாள்
29
ஆக
2016
12:08
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், நேற்று ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வழுக்குமரம் ஏறினர். ரெட்டியார்சத்திரம் அருகே மலைக்குன்றில், கோபிநாதசுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக மலையிறங்கும் உற்சவர், தொடர்ந்து 3 நாட்களில் சுற்றியுள்ள 18-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் எழுந்தருளல் விசேஷமாக நடக்கும். இந்தாண்டிற்கான விழா, ஆக. 22ல் கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில்முன்பு உறிமரம் நடுதலுடன் துவங்கியது. விழாவில், உற்சவர் மலையிறங்குதல் ஆக. 26ல் நடந்தது. முன்னதாக ஏகாந்த சேவையில் எழுந்தருளிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுவாமிக்கு விசேஷ பூஜைகளுக்குப்பின் மலையில் இருந்து புறப்பாடு நடந்தது. ராமலிங்கம்பட்டி, கட்டச்சின்னான்பட்டி, கே.எல்லைப்பட்டி, எர்ணம்பட்டி, முத்துராம்பட்டி, குளத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, தோப்புப்பட்டி, வாடிப்பட்டி, அய்யம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து 3 நாட்கள் கிராம வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வழுக்கு மரம் ஏறுதல் நேற்று நடந்தது. முன்னதாக தயார் நிலையில் இருந்த வழுக்குமரத்தில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வழுக்குமரம் ஏறினர். 70 நிமிட முயற்சிக்குப்பின், பரிசு முடிச்சு அவிழ்க்கப்பட்டது. பின்னர், உறியடித்தல் நடந்தது.