பெருமாளின் திவ்யதேசங்கள் 108. இதில் 11, ஒரே ஊரில் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே! அந்த பெருமைக்குரிய ஊர் தான் திருநாங்கூர். இங்கு திருக்காவளம்பாடி, திருஅரிமேயவிண்ணகரம், திருவண் புருடோத்தமம், திருச்செம்பொன்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்த விண்ணகரம் என்னும் ஆறு திவ்யதேசங்கள் ஊருக்குள்ளேயே அமைந்துள்ளன. ஊரைச் சுற்றி சற்று தொலைவில் திருத்தேவனார்தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி ஆகிய ஐந்து தலங்கள் உள்ளன. இவற்றை திருநாங்கூர் 11 திவ்யதேசங்கள் என்று அழைப்பர். தட்சனின் யாகத்தை தடுக்கச் சென்ற, சிவனின் மனைவியான தாட்சாயிணியை அவளது தந்தை அவமானப்படுத்தினான். இதனால் கோபமடைந்த சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். சிவனின் ஜடாமுடி அவிழ்ந்து, முடி தரையில் படும் போதெல்லாம் அதிலிருந்து ருத்ரமூர்த்திகள் வெளிவரத் தொடங்கினர். இப்படி 11 ருத்ரர்கள் வெளிவர, தேவர்கள் செய்வதறியாமல் திருமாலைச் சரணடைந்தனர். திருமால் 11 வடிவங்கள் எடுத்து அவர்களைச் சாந்தப்படுத்தினார். அந்த சிவரூபங்களை ஒன்றாக்கினார். பெருமாளின் அந்த 11 வடிவங்களுமே உபயகாவேரி மத்திமம் என்ற புராணப் பெயர் பெற்ற திருநாங்கூரில் எழுந்தருளினர். ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்யதேச பெருமாள்களும் கருட வாகனத்தில் திருநாங்கூரில் ஒன்று கூடுவர். இவர்களை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் (பாடுதல்) செய்யும் வைபவம் சிறப்பாக நடக்கும். அதன் பின் மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். திருவண்புருஷோத்தமம் கோவிலுக்கு வருபவர்கள், மற்ற திவ்யதேசங்களையும் தரிசிக்க வாய்ப்பான தலம் இது.