இக்கால இளைஞர்களும், பெண்களும் மேலை நாட்டு நாகரிகத்தையும் கலாசாரத்தையும் விரும்புகின்றனர். அவர்களது சிகை அலங்காரம், உடை அலங்காரம், பாலுணர்வு சார்ந்த பழக்கங்கள், உணவு முறைகளை வேகமாக பின்பற்றுகின்றனர். அரைகுறையாக உடையணிந்து கொண்டு பேஷன் என்கின்றனர். பெரும்பாலும் மேலை நாட்டவரின் தவறான பழக்கங்களை வேகமாக பின்பற்றும் நாம், அவர்களிடமுள்ள நல்ல பழக்கங்களை கண்டு கொள்வதில்லை. ஏன்... அதைப்பற்றி தெரிந்து கொண்டது கூட இல்லை. அவர்கள் சிறு உதவிக்கும் பெரிய நன்றி சொல்வார்கள். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பார்கள். தேவையில்லாமல் அடுத்தவர் விவகாரத்தில் தலையிட மாட்டார்கள். அதேநேரம், மற்றவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று எண்ண மாட்டார்கள். போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள். பின்னால் வந்துவிட்டு, முன்னால் போக விரும்பமாட்டார்கள். நேரம் தவறாமைக்கு அவர்கள் உதாரணம். இதுபோன்ற பல நல்ல செயல்களையும், பண்புகளையும், பழக்க, வழக்கங்களையும் நாம் பின்பற்றுவதில்லை. நல்லவைகளை பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளவே முதலில் கவனம் செலுத்த வேண்டும். மேலை நாட்டு கலாசார சீரழிவுகளை மட்டும் பழகிக்கொண்டு, அவர்களிடமுள்ள நற்பண்புகளை தெரிந்து கொள்ளாமலேயே விட்டு விடுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. “எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்,” என்ற பைபிள் வசனத்தை நினைவில் வைத்துக் கொண்டால், மற்றவர்கள் செய்யும் நல்லதை மட்டும் கடைப்பிடிக்கும் எண்ணம் வரும்.