பதிவு செய்த நாள்
03
செப்
2016
05:09
உபன்யாசகர் டி.எல்.மூடி தனது பிரசங்கத்தின் போது, ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, பிட்ஸ்பர்க் யுத்தகளத்தில் ராணுவத்தினருக்கும், புரட்சியாளர்களுக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. அநேக ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். தன்னார்வு மீட்புக்குழுவினர் காயமுற்றோரை துரிதமாக மருத்துவமனையில் சேர்க்க உதவினர். இறக்கும் நிலையில் இருந்தவர்களிடம், கடைசி நேரத்திலாவது இயேசுவைப் பற்றியும், பரலோகத்தைக் குறித்தும் பேச தீர்மானித்தனர். ஒரு வீரன் கால் எடுக்கப்பட்ட மோசமான நிலையில் மயக்கமாக இருந்தான். மீட்புக்குழுவின் தலைவர் மருத்துவரிடம் அவனைப் பற்றி விசாரித்ததுடன், “சிறிது நேரமாவது அவனது மயக்கம் தெளிய உதவுங்கள்,” என்றார். “மயக்க நிலையிலேயே அவனது உயிர் பிரிவதே நல்லது. ஒருவேளை மயக்கம் தெளிந்தாலும் அதிக நேரம் அது நீடிக்காது,” என்ற மருத்துவர், தலைவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு ஊசியைப் போட்டார். அவன் யாரென்று தெரியாமலே மரித்து விடக்கூடாதே என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு வீரன் குறுக்கிட்டு, “அவனை எனக்குத் தெரியும். அவன் பெயர் வில்லியம் கிளார்க். அவனுக்கு தந்தை இல்லை. தாயும், இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். வீட்டுக்கு ஒரே மகன் இவன்,” என்றான்.
அப்போது மயக்கத்தில் இருந்த வீரன் கண் விழித்தான். சுற்றுமுற்றும் பார்த்து விழித்தான். “வில்லியம்! நீ எங்கே இருக்கிறாய் தெரிகிறதா? என்ற மருத்துவரிடம்,“நான் என் அம்மா வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறேன்,” என்றான்.மருத்துவர் தன் மனதிற்குள்,“ நீ உன் வீட்டிற்கு போய்க் கொண்டிருக்கிறாய் என்பது உண்மை தான். ஆனால் பூமியிலுள்ள வீட்டிற்கு போகவில்லை,” என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டே, “உன் அம்மாவுக்கு நான் ஏதேனும் செய்தி அனுப்ப வேண்டுமா?” என்றார். அப்போது அவன் முகம் பிரகாசமடைந்தது. “வில்லியம், இயேசு கிறிஸ்துவில் முற்றுமாய் சார்ந்து கொண்டு மரித்தான் என்று என் அம்மாவுக்கு சொல்லுங்கள்,” என்று புன்னகையுடன் சொன்னான். “வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமா?” என்ற மருத்துவரிடம்,“என் அம்மாவும், சகோதரிகளும் என்னை பரலோகத்தில் சந்திக்க நிச்சயப்படுத்திக் கொள்ளும்படி சொல்லுங்கள்,” என்றான். பின் அவனது கண்கள் மூடின. தன் பணிக்காலத்தில் இப்படி ஒரு மரணத்தைப் பார்த்ததே இல்லை என்று மருத்துவர் வியந்தார். அருகிலிருந்த மீட்பு குழுவினரும் பரலோகத்திற்கு போகிறேன் என்ற அவனுக்கிருந்த நிச்சயத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர்.– தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து...