பதிவு செய்த நாள்
06
செப்
2016
10:09
மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கற்பக விநாயகர் சன்னதியில் பூஜை நடந்தது. கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்களுக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் செப்.,1 முதல் நடந்த லட்சார்ச்சனை, யாகசாலை பூஜைகள் நேற்று பூர்த்தி செய்யப்பட்டு, மூலவர், உற்சவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மகா கணபதி ஹோமத்தை தொடர்ந்து மாலையில் மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார். பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், சங்காபிஷேகம் நடந்தது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் மருதுபாண்டியர் தெருவிலுள்ள ஆனந்த விநாயகர் கோயில், சுந்தர் நகர் வெற்றி விநாயகர் கோயில், திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் சர்வ சித்தி விநாயகர் கோயில், நெல்லையப்பபுரம் துர்கா விநாயகர் கோயில்களிலும் பூஜை நடந்தது.