ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆக.,27ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம, மயில், ரிஷப, காமதேனு, குதிரை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் எட்டாம் நாளில் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று பக்தர்களுடன் மோர்ப்பண்ணை கடலில் புனித நீராடிய வெயிலுகந்த விநாயகர், சதுர்த்தி தீர்த்தவாரியுடன் காளை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் கோயில் முன்பு தீ மிதித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
*ஆர்.எஸ்.மங்கலம் இந்து பேரவை சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதியம்மன் கோயிலில் இருந்து புல்லமடைரோடு, பஜார் வீதி, பரம்பைரோடு வழியாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.மங்கலம் பூவாணிபேட்டை விநாயகர் கோயிலில் மிளகாய் நவதானிய வியாபாரிகள் சார்பில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கலை நிகழ்சிகள் நடைபெற்றது. வாணியக்குடி வீர விநாயகர் கோயிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.