பதிவு செய்த நாள்
07
செப்
2016
12:09
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட, 46 விநாயகர் சிலைகள் இன்று அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. கிணத்துக்கடவில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், 38, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நான்கு, பொதுமக்கள் சார்பில் நான்கு விநாயகர் சிலைகள் உட்பட 46 விநாயகர் சிலைகள் நேற்று முன் தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளுக்கு கணபதி பூஜை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. இச்சிலைகள், கிணத்துக்கடவு புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரேயுள்ள கரியகாளியம்மன் கோவில் மைதானத்திற்கு லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் இன்று பிற்பகல் 12.00 மணியளவில் வந்து சேர்கிறது. பின், அங்கிருந்து ஊர்வலமாக அம்பராம்பாளையம் ஆற்றுக்கு பிற்பகல், 2.00 மணிக்கு மேல் சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.