பதிவு செய்த நாள்
07
செப்
2016
12:09
பொள்ளாச்சி: பெரியநெகமம் கடைவீதியில் உள்ள, 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீநித்தீஸ்வரர் ஆலயம், திருப்பணிகள் செய்யாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. நெகமம், கரப்பாடி,தேவணாம்பாளையம் பகுதிகளில், பழங்கால கோவில்கள் பல இன்றும் வழிபாடுகளுடன், பராமரிக்கப்பட்டும் வருகின்றன. ஆனாலும், அறநிலையத்துறைக்கு உட்பட்ட சில கோவில்கள், எவ்வித பூஜையும் நடத்தப்படாமல் பூட்டப்பட்டுள்ளன. இதில், முக்கியமானது நேரிள மங்கை ஸ்ரீநித்தீஸ்வரர் கோவில். 700 ஆண்டுகள் பழமையான இக்கோவில் நியம முனிவரால் உருவாக்கப்பட்டது. இதனால், இவ்வூருக்கு நியமம் என்ற பெயர் வந்ததாகவும், பின் இதுவே நெகமம் என்றானதாக கல்வெட்டுகள் கூறுவதாக மக்கள் தெரிவித்தனர். தவிர, காசிக்கு நிகராக, கோவிலின் ஈசான மூலையில் மயானம் அமைந்துள்ளது, இக்கோவிலுக்கு சிறப்பு என தெரிவிக்கின்றனர்.
மிகப்பழமை வாய்ந்த இக்கோவிலின் சிறப்பு தெரியாமல், அழிந்து வரும் நிலையில் உள்ளது. கடந்த, 35 ஆண்டுகளாக இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. பொதுவாக,12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விஷயம் பற்றி, பலமுறை பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் தமிழக அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை. இந்து முன்னணியினரும், ஸ்ரீநித்தீஸ்வரர் பக்தர்களும் கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்திட வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனாலும், இக்கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. அடுத்த சில நாட்களில், ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, கோரிக்கையை அரசிடம் தெரிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, பெரியநெகமம் சந்தைப்பேட்டை அருகில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும். தேவணாம்பாளையம் கிராமத்தில், பல ஆண்டுகளாக மாரியம்மன் கோவில் சேதமடைந்து காணப்படுகிறது. இதை கிராம மக்களே முன்வந்து கோவிலை புதுப்பிக்க தயாரான நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்து அறநிலையத்துறை கண்டு கொள்ளாமல் தடையாக உள்ளது. உடனடியாக தமிழக அரசு பழமையான இக்கோவில்களின் நிலையை அறிந்து, கோவில்களை புதுப்பிக்க உத்தரவிட வேண்டும். தவிர, பொதுமக்கள் வேண்டுகோளின்படி, கிராமங்கள் இழந்த புத்தொளியை மீண்டும் பெற, இக்கோவில்களின் கும்பாபிஷேகத்தையும் உடனடியாக நடத்திட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.