Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » திருப்பாணாழ்வார்
திருப்பாணாழ்வார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2016
15:16

சோழமன்னனின் தலைநகராக விளங்கிய உறையூரில் 8-ஆம் நூற்றாண்டில் செந்நெற்பயிரிடையே திருப்பாணாழ்வார் அவதரித்தார். பாணர் குலத்து மனிதர் ஒருவர் வயல் வெளியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அழுகுரல் கேட்டது! என்ன இது! ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறதே, என்று யோசித்து நின்றார். சற்று தள்ளி போய் வயலின் நடுவில் சென்று பார்த்தார் அங்கு ஒரு குழந்தை அழுதுக்கொண்டிருந்தது. அந்த குழந்தையை அவர் வாரி எடுத்து கொஞ்சினார், ஆஹா! குழந்தையில்லாத எங்களுக்குப் பெருமான் அளித்த பிரசாதம் இந்தக் குழந்தை என்று கூறி வீட்டிற்கு சென்று தன் மனைவியிடம் காட்டினார். அவர் மனைவியும் ஆ! எவ்வளவு அழகான குழந்தை, யாருடையது? என்று கேட்டார். பிரியே, இவன் வயலில் கிடைத்த பெருமானின் பிரசாதம். இவனை நாம் அன்புடன் வளர்த்து குலவழக்கப்படி யாழிசையையும் பயிற்றுவிப்போம் என்று கூறினார். பாணர் வளர்த்த சிறுவன் பெரியவனான். யாழிசையில் வல்லவன் ஆனான். அதனால் எல்லோரும் அவனை பாணன் என்றழைத்தனர்.

சிறுவயது முதல் அரங்கனிடம் பெரிதும் ஈர்ப்பு கொண்ட பாணர் முதன் முறையாக ஸ்ரீரங்கம் வந்தார். ஸ்ரீரங்கம் வந்து அவர் கால் வைத்ததுமே அவரது உடலின் மேல் ஓர் சிலிர்ப்பு உண்டாயிற்று. ஆஹா! பூலோக வைகுண்டமே திருவரங்கம்! ஆனால், தாழ்ந்த குலத்தவனாகிய நான் எப்படி இப்புண்ணிய பூமியில் கால் வைப்பேன்? என்று கூறினார். தினமும் வைகறையில் காவிரியின் தென் கரையில் யாழிசைத்து அரங்கனை நோக்கிப் பக்திப் பாடல்கள் பாடி வந்தார் பாணர். அப்படி, ஒருநாள் அரங்கன் கோயிலின் பூஜாரி லோகசாரங்கர் பாணரிடம் கோபிக்க நேர்ந்தது. ஏய், கீழ்ஜாதிக்காரா, திருமஞ்சனம் எடுத்து வரும் வழியில் நிற்காதே தள்ளிப் போ என்று கூறினார். மெய்மறந்து பக்தியில் ஆழ்ந்திருந்த பாணர் காதில் இவர் சொன்னது விழவில்லை. நான் சொன்னது காதில் விழவில்லையா? அப்படியே நிற்கிறாயே? என்று மறுபடியும் சொன்னார். லோகசாரங்கர் உடனே சிறு கல்லை எடுத்து பாணரை அடித்தார். அவரது நெற்றியில் ரத்தம் வழிந்தது. கண்விழித்துப் பார்த்து, அபசாரத்திற்கு வருந்தி அப்பால் சென்றார் பாணர்.

லோகசாரங்கர் திருமஞ்சனத் தீர்த்தத்துடன் அரங்கன் சன்னிதிக்கு வந்தார். கருவறை மூடியிருந்தது. இது என்ன அபச்சாரம்? பெருமாள் சன்னிதி மூடிக் கிடக்கிறதே, திறக்கவும் முடியவில்லையே, என்ன செய்வேன்? என்று புலம்பினார். சன்னிதிக்கு வந்திருந்தவர்களிடம் லோகசாரங்கர் பெரியோர்களே, கோயிலின் கருவறை உள்ளே தாளிடப்பட்டிருக்கிறது. எவ்வளவு முயன்றும் திறக்க முடியவில்லை ஏதோ தெய்வ குற்றம் நடந்துள்ளது. பெருமாளிடம் வேண்டுவோம் என்று கூறினார். பெருமானே, என்ன குற்றம் செய்திருந்தாலும் அடியேனை மன்னியுங்கள் என்று  லோகசாரங்கர் கூறினார். அவருடன் சேர்ந்து மக்களும் வேண்டினர். அப்போது கோயில் கருவறையிலிருந்து ஒரு அசரீரி கேட்டது. லோகசாரங்கா! நீ பாணனின் பெருமையை அறிய மாட்டாய். அவன் எனக்கு இனிய பக்தன். அவனைக் கல்லால் அடித்துவிட்டாய். அதற்குப் பிராயச்சித்தமாக நீ அவனை உன் தோளில் அமர்த்திக் கொண்டு வா. கருவறைக் கதவு திறக்கும் என்று அசரீரி சொன்னது.

எம்பெருமானே! பாணரின் சிறப்பை அறியாது பிழை செய்துவிட்டேனே! என்னை மன்னியுங்கள் இறைவா என்று கைக்கூப்பி வணங்கினார். லோகசாரங்கன் பாணரின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார். அவருடன் ஊர் மக்களும் வந்தனர். பாணரே! தங்களது மகிமையை பெருமாளே எனக்குத் தெரிவித்தார். அபச்சாரத்திற்கு மன்னியுங்கள். ஐயா! பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீர்கள். நான்தான் தங்களுக்குப் பெரிய அபச்சாரம் செய்து விட்டேன். பொறுத்தருள வேண்டும் என்று பாணர் கூறினார். லோகசாரங்கர் பாணர் கூறிய எதையும் காதில் வாங்காது பிடிவாதமாக அவரைத் தமது தோளில் சுமந்து கொண்டு கோயிலின் ஏழு பிரகாரங்களையும் சுற்றி வந்தார். இதன் காரணமாக பாணருக்கு முனிவாகனர் என்ற பெயர் ஏற்பட்டது. திருவரங்கன் சன்னிதிமுன் வந்தவுடன் பாணரை லோகசாரங்கர் கீழே இறக்கினார். அப்போது கோயில் கதவு தானே திறந்தது. அரங்கநாதரின் பள்ளிக் கொண்ட பெருமானாக காட்சி தந்தார். திவ்ய தரிசனத்தால் பாணர், கண்களில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுக்கப் பாடலானார். அமலனாதி பிரான் அடியர்க்கென்னை ஆட்படுத்த விமலன்.... மற்றொன்றினைக் காணாவே என்று உருகி பாடினார். உள்ளம் கவர்ந்த அமுதம் போன்ற திருவரங்கப் பெருமானைக் கண்ட பாணரின் கண்கள் இனி வேறெதையும் காண விரும்பாததால் உடனே அங்கு ஒரு ஜோதிப் பிழம்பு எழுந்தது. அனைவர் முன்னிலையிலும் அவர் அந்த ஜோதியில் இரண்டறக் கலந்து விட்டார். பாணர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக திருப்பாணாழ்வார் என்று போற்றப்படுகிறார்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.