பதிவு செய்த நாள்
08
செப்
2016
11:09
துாத்துக்குடி: நவ திருப்பதி தலங்களில் ஒன்றான, திருக்கோளூர் வைத்தமாநதி பெருமாள் கோயில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. நவ திருப்பதி கோயில்களில் செவ்வாய் ஸ்தலமாக, துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் திருக்கோளூர் வைத்தமாநதி பெருமாள் கோயில் திகழ்கிறது. இந்த கோயிலின் ஆவணி திருவிழா ஆக., 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் வைத்தமாநதி பெருமாள், தோளுக்கினியான், இந்திர, அனுமந்த, யானை, அன்ன வாகனங்களில், பல்லக்கில் எழுந்தருளலும், கருட சேவையும் நடந்தது. தேரோட்டம்: நேற்று காலை சுவாமி திருத்தேரில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. இன்று காலை 9 மணிக்கு பெருமாளும் தாயாரும், பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகின்றனர். பகல் 1 மணிக்கு திருப்பாவை சாற்று முறையும், இரவு 9 மணிக்கு திருவாய்மொழி சாற்று முறையும் நடக்கிறது.