பதிவு செய்த நாள்
10
செப்
2016
11:09
ஊத்துக்கோட்டை: விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில், ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில், 104 விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
கடந்த, 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி, களிமண்ணால் ஆன சிலைகளை அமைத்து, பக்தர்கள் வழிபட்டனர். அவல், பொரி, கடலை, பொங்கல் உள்ளிட்ட பலகாரங்கள் வைத்து வழிபட்ட பின், அந்தந்த பகுதிகளில் வீதிஉலா வந்து, விநாயக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை உட்கோட்டம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பென்னலுார் பேட்டை, வெங்கல், ஆரணி ஆகிய பகுதிகளில், 205 சிலைகள் வைக்கப்பட்டன. 3 முதல், 10 அடி வரை சிலை வைத்து, பக்தர்கள் வழிபட்டனர். இதையடுத்து, நீர்நிலைகளில் கரைக்க ஆயத்தமானது. அன்றைய தினம் மாலையே ஒரு பகுதியினர் சிலைகளை கரைத்தனர். சிலர் மூன்று, ஐந்து, ஏழு நாட்கள் கழித்து, விநாயகர் சிலைகளை கரைக்கின்றனர். (செப்.,9) வரை, ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில், 104 சிலைகள் கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகள் அடுத்தடுத்த தினங்களில் கரைக்கப்பட உள்ளன.