பதிவு செய்த நாள்
10
செப்
2016
12:09
காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு மேலாக சுவாமிக்கு தங்க நகைகள் அணிவிக்கப்படவில்லை என, பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது, ‘திருவிழா காலங்களில் சுவாமிக்கு நகைகளை சாற்றுகிறோம். மற்ற நாட்களில் நகை அணிவிப்பது இல்லை; நகைகள் பத்திரமாக உள்ளன. யாருக்கும் கவலை வேண்டாம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான தலம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோவில், சைவ தலங்களில் பிரபலமானது. சைவ குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கோவில் ஒரு பகுதி கட்டப்பட்டது. அதன் பின் சோழர் காலத்திலும், விஜயநகர பேரரசு காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளன. 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது.
கடந்த, 22 ஆண்டுகளுக்கு முன் மலைமேல் தினமும் பகல், 12:00 மணிக்கு, கழுகுக்கு உணவு வழங்கப்படும். இந்த அரிய காட்சியை காண, வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவர். பின் திருப்பணியின் போது, ராஜகோபுரங்கள் சீரமைக்கப்பட்ட போது அந்த கழுகு வேறு இடம் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் சித்திரை மாதம் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாணிக்க வாசகர் உற்சவம், பிட்டுக்கு மண் சுமந்த திருக்காட்சி விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் சுவாமிக்கு அணிவித்த தங்க நகை காணாமல் போனதாக கூறப்படுகிறது.
அதன் பின் பாதுகாப்பு கருதி, அதிக நகை சுவாமிக்கு சாற்றப்படுவதில்லை என, பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பக்தர்கள் கேள்வி: சுவாமிக்கு ஏராளமான தங்க, வைர நகைகள் உண்டு, அவை, நீண்ட காலமாக சாற்றப்படாமல் உள்ளதால், அவை என்னவாயிற்று என, பக்தர்கள் கேள்வி எழுப்பினர். அந்த சந்தேகத்தை போக்கும் வகையில், கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது, நகைகள் பத்திரமாக உள்ளன; யாரும் கவலைப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீசக்கரத்துடன் அம்மன்: திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை, அதாவது ஆடிப்பூரம், நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் மட்டும் அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அம்பாள் பாதத்தில் மட்டும் அபிேஷகம் நடக்கும். அம்மன் ஸ்ரீசக்கரத்துடன் கூடிய தங்க நகை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருவிழா காலங்களில் நகைகளை சுவாமிக்கு சாற்றுகிறோம். மற்ற நாட்களில் நகை அணிவிப்பது இல்லை. நகைகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. என்ன நகைகள் இருக்கின்றன என்பது குறித்து, பாதுகாப்பு காரணங்களுக்காக யாரிடமும் சொல்வதில்லை. தற்போது கோவிலில் முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தும்
பணி நடக்கிறது. கோவில் செயல் அதிகாரி
மலையே சிவன் திருமேனி: வேதகிரீஸ்வரர் வீற்றிருக்கும் மலையே சிவன் திருஉருவமாக கருதி சைவ குரவர்கள் மலை மேல் ஏறாமல் கீழ்பகுதியில் அமைந்துள்ள பக்தவத்சலேஸ்வரர் சன்னிதியில் இருந்து பாடியுள்ளனர். மலை மேல் உள்ள சிவன் சன்னிதி முன் நந்தி சிலை கிடையாது. அதற்கு பதிலாக ரிஷப தீர்த்தம் அருகில் நந்திதேவர் மலையை பார்த்தவாறு இருக்கிறார்.