பதிவு செய்த நாள்
13
செப்
2016
12:09
திருவண்ணாமலை: மழை வேண்டி, பெண் உருவ பொம்மையை பாடையில் எடுத்து சென்று, இறுதிச்சடங்கு செய்து, பொதுமக்கள் நுாதன வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி கிராமத்தில், நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்கள், நீரின்றி வறட்சியால் வாடுகின்றன; கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கிராம மக்கள் மழை வேண்டி, பெண்ணின் உருவ பொம்மை செய்து, அதை பாடையில் கட்டி, சாவு மேளம் அடித்தவாறு, அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு ஊர்வலமாக சென்றனர். பின், இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் செய்து, அந்த உருவ பொம்மையை தகனம் செய்து, வழிபாடு நடத்தினர். இதில், கிராமத்தைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து, கிராம மக்கள் கூறுகையில், இந்த வழிபாட்டை செய்தால், மழை பெய்யும் என்பது எங்கள் நம்பிக்கை; அதற்காக, இந்த வழிபாட்டை செய்தோம் என்றனர்.