பதிவு செய்த நாள்
16
செப்
2016
01:09
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு காட்டழகர் கோயில் செல்லும் கரடு முரடான மலை பாதையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி செண்பகதோப்பு வனப்பகுதியில் காட்டழகர் கோயில் உள்ளது. சனி, ஞாயிறுகிழமைகளில், புரட்டாசி மாத ஐந்து சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவர்.. செண்பகதோப்புக்கு போதிய பஸ் வசதி யில்லாததால் பெரும்பாலான பக்தர்கள் டூவீலர், ஆட்டோ, கார் மூலமாக வருகின்றனர். செண்பகதோப்பிலிருந்து 6 கி.மீ துாரம் கரடுமுரடான பாதைகளில் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். வழியில் ஓய்வெடுக்க மண்டபங்கள், கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதியில்லை. சில இடங்களில் நீர்வரத்து ஓடைகளை கடந்து செல்லவேண்டியுள்ளது. இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் பெருமாளை தரிசிக்க, உள்ளூர், வெளிமாவட்ட பக்தர்கள் வருகின்றனர். செண்பகதோப்பிற்கு கூடுதல் பஸ் இயக்க, போதிய அடிப்படை வசதி செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஸ்ரீவில்லிபுத்துார் ஜெகநாதன் கூறுகையில், “உள்ளூர், வெளி மாவட்ட
பக்தர்கள் கோயிலுக்கு வந்துசெல்கின்றனர். கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை. பக்தர்கள் நலன்கருதி பஸ் வசதி, குடிநீர், கழிப்பிடம், பாதை சீரமைக்க மாவட்டநிர்வாகம் மேற்கொள்ளவேண்டும்” என்றார்.