பதிவு செய்த நாள்
17
செப்
2016
12:09
உடுமலை: உடுமலை அருகே ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று துவங்குகிறது.உடுமலை மூணாறு ரோட்டில், 22 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறும். இதையொட்டி சனிக்கிழமைகளில் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் இடம்பெறும். கோவிலுக்கு முதல் நாள் இரவு முதலே பக்தர்கள் வருகை தருவர். கோவில் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, மலைக்கு ஐந்து கிலோ மீட்டர் துாரம் நடந்து செல்ல வேண்டும். விழா நாட்களில், கோவில் அடிவாரம் வரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கோவில் செல்லும் வழியில் தற்காலிக திருவிழா கடைகள் போடப்படும். இதனால், அப்பகுதி முழுவதும் புரட்டாசி சனிக்கிழமைகளில் களை கட்டும்.
இந்த ஆண்டுக்கான புரட்டாசி திருவிழா கோவிலில் இன்று துவங்குகிறது. காலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜை, அபிேஷகம் நடைபெறுகிறது. விழாவுக்காக கோவிலில் வழித்தடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில், ஐந்து சனிக்கிழமைகளில் கோவிலில் இவ்விழா நடைபெறும். இதில் உடுமலை மற்றும் திருப்பூர், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத்துறையினர், வனத்துறையினர் செய்து வருகின்றனர். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, உடுமலையிலிருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் நடக்கும் சிறப்பு பூஜைக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக, புரட்டாசி சனிக்கிழமைகளில், உடுமலை போக்குவரத்து கழகத்திலிருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.உடுமலை, கிளை போக்குவரத்து கழகத்தினர் கூறுகையில், இன்று(நேற்று) இரவு 8:00 மணி முதலே கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் துவங்குகிறது. மூணார் செல்லும் தமிழக போக்குவரத்து கழக பஸ்கள், கோவில் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் வாரம் என்பதால், மூன்று சிறப்பு பஸ்கள், கோவில் வரை சென்று வர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நாளை(இன்று) மாலை வரை, இந்த பஸ் இயக்கப்படும். பயணிகளின் கூட்டத்தை பொறுத்து, கூடுதல் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும், என்றனர்.