சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். பெருமாள் தனது தாள்களால் (பாதங்கள்) உலகம் அளந்தவர் என்பதால் தாளாளன் என்று பெயர் பெற்றார். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது. ஒருசமயம் இத்தலம் அழிந்து போனது. அப்போது இந்தக் கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.