சென்னை மாமல்லபுரம் சாலையில் கோவளத்தை அடுத்து அமைந்திருப்பது திருவிடந்தை. காலவ மகரிஷி தன் மகள்கள் 360 பேரையும் மணம் முடிக்க பெருமாளே வர வேண்டும் என்று தவம் இருந்தார். அவரின் தவத்தை ஏற்று பெருமாள், யாத்திரை செல்பவர் போல் வந்தார். அப்பெண்கள் அனைவரையும் ஒரே உருவமாக்கினார். அவளை தனது இடப்பாகத்தில் ஏற்றுக் கொண்டார். வராக மூர்த்தியாகப் பெருமாள் இங்கு சேவை சாதிக்கிறார். திருமகளாகிய அப்பெண்ணை தன் இடப்பாகத்தில் வைத்த படியால் திரு+இட+ எந்தை என்பது திருவிடவெந்தை என்றாயிற்று. காலப்போக்கில் மருவி திருவிடந்தை ஆகி விட்டது. இங்கு பெருமாள் நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். ஒரு ஆண்டிலுள்ள 365 நாட்களில் 360 நாட்கள் ஒவ்வொரு பெண்ணாக கல்யாணம் செய்து கொள்ளும் இவர், ஐந்து நாட்கள் பிற சடங்குகளுக்காக ஒதுக்கிக் கொள்கிறார். இங்கு பெருமாளின் ஒரு திருவடி பூமியிலும், மற்றொரு திருவடி ஆதிசேஷன் மீதும் உள்ளது. அகிலவல்லித் தாயாரை மடியில் தாங்கியிருக்கிறார்.