சேலம் மாவட்டம் ஆறகளூரில் வசித்த மண்பாண்டத் தொழிலாளர்கள், வசிஷ்ட நதிக்கரையில் இருந்த செம்மண் குவியலை பெயர்த்தனர். அப்போது உள்ளிருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த மக்கள் இப்பகுதி சிற்றரசனிடம் தகவல் தெரிவித்தனர். மண்ணுக்கு அடியில் மகிஷாசுரமர்த்தினி சிலை இருந்ததை அவன் கண்டான். அதை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். அம்பிகை வடக்கு நோக்கி காட்சி யளிக்கிறாள். மகிஷனுடன் சண்டையிட்டபோது, அவனை அழிக்க அம்பிகை ஒரே சமயத்தில் ஆயிரம்அம்புகளை அவன் மீது எய்தாள். இதனால் இவளுக்கு அம்பாயிரம்மன் என்று பெயரிடப்பட்டது. இங்கு வரும் பக்தர்கள் வசிஷ்ட நதியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து, அதை அம்பிகையாகக் கருதி, ஆற்று நீரால் அபிஷேகம் செய்கின்றனர். பின், அதை மரத்தில் கட்டி, பேச்சுமணி கொடுத்தால் ஆட்டுமணி தருவேன்! எனச் சொல்லி வேண்டுகின்றனர். பேசும் திறன் கொண்ட குழந்தையை பேச்சு மணி என்றும், ஆட்டினால் ஓசை எழுப்பும் வெண்கலமணியை ஆட்டு மணி என்றும் கருதி, குழந்தை பிறந்தால் மணி கட்டுவதாக சொல்லி வழிபடுகிறார்கள். பிறந்த குழந்தைகளுக்கு பக்தர்கள் அம்பாயி, அம்பாயிரம் என்ற பெயர்கள் சூட்டும் வழக்கம் உள்ளது. நவராத்திரி விசேஷமாக நடக்கும்.