மருதுபாண்டியர் காலத்து சிவன் கோவில் சேதம்: புதிப்பிக்க நிதியின்றி தவிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2016 12:09
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மருது பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு இடிந்த சிவன் கோவிலை புதிதாக கட்ட நிதி ஆதாரமின்றி கிராம மக்கள் தவிக்கின்றனர். கடந்த 18ம் நுாற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆட்சி செய்த மருது சகோதரர்கள் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஏராளமான குளங்கள், கோவில்களை கட்டியுள்ளனர். இவர்களது காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், குன்றக்குடி உள்ளிட்ட பகுதி கோயில்களும், சருகணியில் மாதா கோவிலும் இன்றளவும் மருது பாண்டியர்களின் காலத்தை பறைசாற்றி வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் பிள்ளையார் கோவில், சாத்தனுார் திருவாய் ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் இவரது காலத்தில் கட்டப்பட்டன.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சாத்தனுார் திருவாலீஸ்வர் கோயிலில் ஆளவந்த அம்மன், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக சாத்தனுார், சமுத்திரம், அள்ளூர் பனங்காடி கிராமத்தினர் விழா எடுத்து வந்தனர். இந்நிலையில், 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவன் கோயில் சிதிலமடைந்தததால் 60 ஆண்டிற்கு முன் கோயில் இடிக்கப்பட்டு அருகில் புதிதாக கோயில் கட்டும் பணி துவங்கியது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோயில் கட்டுமானப் பணிக்கு தேவஸ்தான முயற்சியால் 1999ல் அப்போதைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்குடிமகனிடம் நிதி பெறப்பட்டு பணி நடைபெற்றது. அதன் பின் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் பாதி கட்டப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக கோவில் பணி கிடப்பில் உள்ளது. இதனால் கோயிலில் சுவாமிகள் அனைத்தும் தென்னங்கிடுகு வேயப்பட்ட கூரையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு மன்னர் காலத்து கோவிலை கட்ட நிதி வழங்க வேண்டும், என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.