பதிவு செய்த நாள்
01
அக்
2011
11:10
ஸ்ரீவில்லிபுத்தூர் : திருப்பதி வெங்கடாசலபதிக்கு சார்த்துவதற்காக, ஆண்டாள் சூடிய மாலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதிக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் தினமும், ஆண்டாளுக்கு சூடிய மாலையை அணிவித்து பூஜைகள் நடந்து வருகிறது. சித்ரா பவுர்ணமியன்று மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது, ஆண்டாள் சூடிய மாலை, பரிவட்டத்தை அணிந்து ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, ஆண்டு தோறும் நடந்து வருகிறது.இது போல், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் புரட்டாசி ஐந்தாம் நாள் கருட சேவையன்று, பெருமாளுக்கு ஸ்ரீவி., ஆண்டாள் சூடிய மாலையை சாற்றி, சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். இந்நிகழ்ச்சிக்காக , ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு இன்று அனுப்ப படுகிறது. இதற்காக நேற்று காலை ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, மாலை, கிளி சாற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று ஆண்டாள் சூடிய மாலை, கிளி ஆகியவற்றை மாடவீதி, கந்தாடை வீதி வழியாக, நகர் வலம் வந்து, திருப்பதிக்கு கொண்டு செல்லப்படும். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் செய்து வருகின்றனர்.