பதிவு செய்த நாள்
30
செப்
2016
12:09
திருவண்ணாமலை: பசுமை மாறாமல் கிரிவலப்பாதையை அகலப்படுத்த வேண்டும் என, கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர். திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையை விரிவாக்கம் செய்ய, 64 கோடி ரூபாய், தமிழக அரசு ஒதுக்கியது. இதையடுத்து விரிவாக்க பணிகள் நடந்து வந்தன. இதில் மரங்கள் வெட்டப்படுவதாக வந்த புகாரை அடுத்து, பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து, வழக்கை எடுத்து, பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது, பின், இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க, அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார், ஓய்வு பெற்ற முதன்மை வன பாதுகாப்பு அலுவலர் சேகர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது, நேற்று முன்தினம் கிரிவலப்பாதை முழுவதையும் இவர்கள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, சாலை விரிவாக்கத்தின்போது, மரம் வெட்டுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் இந்த குழுவை சேர்ந்தவர்கள், கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே, எஸ்.பி., பொன்னி மற்றும் பொதுமக்கள், 250 பேர் பங்கேற்றனர்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது: சாலை விரிவாக்கம் அவசியம், ஆனால், பசுமை மாறக்கூடாது. மரங்களை வெட்டாமல், நடை பாதை அமைக்க வேண்டும்; தார் சாலை கூடாது; கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது; கழிவு நீர் கால்வாய் புதிதாக அமைக்க கூடாது, மலையின் உட்புறமாக சாலை விரிவாக்கம் கூடாது. பவுர்ணமி நாளில் அடி அண்ணாமலை, அண்ணா நுழைவு வாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில், மருத்துவ குழு அடங்கிய முகாம் அமைக்க வேண்டும் . இவ்வாறு கருத்துக்களை தெரிவித்தனர். தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர் மட்டும், திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினர். கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இதில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது, கிரிவலப்பாதை குறித்த ஆய்வு அறிக்கை மற்றும் பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அறிக்கையை, பசுமை தீர்ப்பாயத்திடம் அளிக்கப்படும். இறுதி முடிவு பசுமை தீர்ப்பாயம் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.