பதிவு செய்த நாள்
01
அக்
2016
04:10
அந்திசாயும் நேரம். திருக்கோவிலுõர் என்ற தலத்திற்கு வந்தார் ஐப்பசியில் மாதத்தில் அவதரித்த ஓரு மகான். ஒரு வீட்டின் வாசலில் நின்று “படுக்க இடம் இருக்குமா?” என்று கேட்டார். அந்த வீட்டுக்காரரும் சிறிது இடம் கொடுத்தார். மகான், அங்கே படுத்துக்கொண்டார். அப்போது மழை பெய்தது. சற்று நேரத்தில், மற்றொருவர் வந்து தங்க இடம் கேட்டார். படுத்திருந்த மகான் எழுந்து, “ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்” என்று கூறினார். அதாவது, ஒருவர் என்றால் படுக்கலாம், இருவர் என்றால் உட்காரலாம், அவ்வளவுக்கு தான் அங்கே இடம் இருந்தது. இருவருமாக உட்கார்ந்தார்கள். புதிதாக வந்தவரும், ஐப்பசியில் அவதரித்தவர் தான். சற்று நேரத்தில், மூன்றாவதாக ஒருவர் வந்து இடம் கேட்டார். இவரும், ஐப்பசியில் அவதரித்தவரே. “ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்.
மூவர் நிற்கலாம்” என்று சொல்லி, மூன்றாமவரையும் அழைத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டு மூவருமாக நின்றார்கள். நான்காவதாக யாராவது வந்தால், அவருக்கு அங்கே இடமில்லை என்ற நிலை. அந்த நிலையில், அங்கே திடீரென்று நெருக்கம் அதிகமானது. நான்காவதாக, யாரோ ஒருவர் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல், குரல் கூடக் கொடுக்காமல் உள்ளே புகுந்து விட்டார். அவர் யார் என்று இருட்டில் தெரியவில்லை. அப்போது, முதலாவதாக அங்கு வந்த பொய்கையாழ்வார், தன் பாட்டு மூலமாக ஒரு விளக்கைக் கொண்டு வந்து விட்டார். வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று எனப் பாடினார். உலகமே அகல்(விளக்கு), நீண்ட கடலே (அந்த விளக்கின்) நெய். ஒளிவீசும் சூரியன் விளக்கு ஜோதி. இப்படிப்பட்ட பாமாலையால் ஆன விளக்கை பொய்கையாழ்வார் ஏற்றி வைத்தார். அடுத்து இரண்டாவதாக வந்த பூதத்தாழ்வார் ஒரு விளக்கை ஏற்றி வைத்தார். அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு எனத் தமிழ் புரிந்த நான். என்று மனமார வாயாரப் பாடி, தமது ஞான விளக்கை ஏற்றி வைத்தார். அன்பே அகல் (விளக்கு), ஆர்வமே (அந்த விளக்கில் ஊற்றும்) நெய்; இன்பமாக உருகிக் கொண்டிருக்கும் சிந்தையே திரி என்பது இதன் விளக்கம். அந்த வெளிச்சத்தில் பளிச் சென்று தெரிந்து விட்டார் நான்காவதாக வந்தவர். அவரை, மூன்றாவதாக வந்த பேயாழ்வார் பார்த்து விட்டார். பார்த்ததை உடனே பாடலாகப் பதிவு செய்து விட்டார்.
“திருக்கண்டேன், பொன் மேனிகண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன், புரிசங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று” என்று அவர்கள் வரலாறு அருமையான பாடத்தை, அவசியமான பாடத்தை, அவசரத் தேவையான பாடத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. என்ன அது? அவர்கள் மூவருமே ஓரிடத்தில், ஒருவர் பின் ஒருவராக வர, மற்றவர் விட்டுக் கொடுத்தனர். அதாவது, முதலில் வந்து படுத்திருந்த பொய்கையாழ்வார், எழுந்து உட்கார்ந்து இடம் கொடுத்தார். இவரும் அடுத்ததாக வந்த பூதத்தாழ்வாரும் எழுந்து நின்று இடம் கொடுத்தார்கள். பேயாழ்வார் வர, மூவருமாக நின்றார்கள். இப்படி விட்டுக் கொடுக்கும் மனோபாவம் உள்ள இடத்தில் நாம் அழைக்காவிட்டால் கூட தெய்வம் தானே மகாலட்சுமியுடன் நம்மைத் தேடி வந்து விடும். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை எனச் சொல்வோமே! அதை நிரூபித்த வரலாறு இது.
அவதார நட்சத்திரங்கள்: பொய்கையாழ்வார் – ஐப்பசி திருவோணம் (7–11–2016)
பூதத்தாழ்வார் – ஐப்பசி அவிட்டம் (8–11–2016) பேயாழ்வார் – ஐப்பசி சதயம் (9–11–2016)