பதிவு செய்த நாள்
03
அக்
2016
12:10
கோவை : நவராத்திரியை ஒட்டி, பல்வேறு கோவில்களில் நடந்த, கொலு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து கோவில்களிலும், நவராத்திரி சிறப்பாக, பகலில் சிவபூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் நடக்கின்றன. கோவில் வளாகத்தில், ஒன்பது படிகள் அமைத்து, கொலு வைத்து, பாடல்கள் பாடி பக்தர்கள் பரவசமடைந்தனர். பொதுவாக கொலுவில், ஓரறிவு முதல், ஆறறிவு கொண்ட உயிர்களை, முதல் ஆறு படிகளில், பொம்மைகளாக அடுக்கி வைப்பர். பின், ஏழாம் படியில், மனிதனின் அறிவுக்கு மேம்பட்ட, மகரிஷிகளின் பொம்மைகள், எட்டாம் படியில், தேவர்கள், பஞ்சபூதங்கள், அஷ்டதிக் பாலகர் பொம்மைகளும் இடம்பெறும். ஒன்பதாம் படியில், உலகை படைத்து, உயிர்களை காக்கும், அனைத்து செயல்பாடுகளுக்கும் மூல காரணமான, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், அவர்தம் தேவியர்களான, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, ஆதிபராசக்தி ஆகியோரின், திருவுருவ பொம்மைகள் இடம்பெற்றன. கொலு வைப்பதன் மூலம், மனித பிறப்புக்கான அர்த்தம், இறைவனின் காக்கும் செயல் பாடுகளை அறியலாம். கோவில்களில் வாசம் செய்யும் இறைவன், வீட்டிலும் எழுந்தருளி காக்கவே, வீட்டில் கொலு வைக்கப்படுகிறது.
* வெள்ளலுார், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், அலங்கார பூஜையுடன், கொலு வழிபாடு துவங்கியது. ஈச்சனாரி, மகாலட்சுமி மந்திர் கோவிலில் நடந்த, நவராத்திரி சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் கலந்து கொண்டு, அம்பாளை தரிசனம் செய்தனர்.
* சித்தாபுதுார், ஐயப்பன் கோவிலில், அதிகாலையில் அஷ்டாபிஷேகத்தோடு, வழிபாடுகள் துவங்கின. கோவில் வளாகத்தில் வைத்த கொலுவில், பஜனை பாடல்களுடன், கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
* சலீவன் விதி, வேணு கோபால சுவாமி திருக்கோவிலில், பரமபதநாதன் அலங்காரத்தில், இறைவன் அருள்பாலித்தார். நவராத்திரி பூஜையில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு, மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
* குறிச்சி, வடிவாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கொலு வழிபாட்டில், துர்க்கை அலங்காரத்தில்,அம்பாள் அருள்பாலித்தார்.
* சின்னியம்பாளையம், குருவிநாயகர் கோவில், கே.கே.புதுார், ஞான ஈஸ்வரி அம்பாள் சமேத ஞான ஈஸ்வரர் கோவிலில், அலங்கார பூஜையுடன், கொலு வழிபாடுகள் துவங்கின. அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்த, அம்பாளை நோக்கி, பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை வேண்டி வணங்கினர்.
* தடாகம் ரோடு, திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணேஸ்வரி, யோக நரசிம்மர் சன்னதியில், சுயம்வர பார்வதி ஹோமம் மற்றும் சண்டி ஹோமத்தோடு வழிபாடுகள் துவங்கின.