சேந்தமங்கலம்: வரதராஜ பெருமாள் கோவில் கோபுரத்தில், மரங்கள் முளைத்துள்ளதால், கோபுரம் சேதமடையும் அபாயம் உள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. தமிழகத்தில், ராஜ கோபுரம் அமைந்துள்ள சில கோவில்களில் இதுவும் ஒன்று. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில், ராஜகோபுரம் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. அதனால், பல்வேறு இடங்களில், ஆல மரம் செடிகள் முளைத்துள்ளன. அதன் காரணமாக, கோபுரம் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இது, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து ராஜ கோபுரத்தை பராமரிப்பதில் அலட்சியம் காட்டினால், கோபுரத்தில் முளைத்துள்ள மரங்களின் வேர்கள், உள்ளே ஊடுருவி, ராஜ கோபுரத்தின் கட்டுமானத்தை சிதைத்துவிடும் அபாயம் உள்து. ’அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், ராஜகோபுரத்தை பாதுகாக்கும் வகையில், மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.